நாடுகடந்த ஈழம் என்பது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு. எந்த ஒரு நாடும் இந்த வகையில் அமையவும் இல்லை, இப்படியான ஒரு முறையில் முன்னெடுக்கப்படவும் இல்லை.
ஈழத்தமிழராகிய நாம் இன்று ஒரு சரித்திரம் படைக்கும் மக்களாக மாறியுள்ளோம். நூற்றாண்டுகளாகத் தொடரும் அடக்குமுறை எம்மக்களை அகதிகளாக்கி உலகெங்கும் பரவச்செய்தது.
எமது வரும்காலத்தை தொலை நோக்குடன் பார்த்தோமேயானால், நாம் எப்போதும் இப்படியே உலகெங்கும் பரந்த இனமாகத்தான் இருக்கப்போகிறோம்.
ஒரு நாடு என்பது ஒரு இன மக்கள் வாழும், புவியியல் பிரதேசமாக இல்லாமல், பல இன மக்களும் வாழும் ஒரு புவியியல் பிரதேசமாகவே பெரும்பாலும் காணப்படுகிறது.
ஆகவே நாடு என்ற சொற்பதத்தை எம்முடைய இந்த புதிய நிலைக்குப் பொருந்துமாறு மாற்றினால், ஈழம் என்பது ஒரு புவியியல் பிரதேசத்துக்கு மட்டும் உட்படாமல், மக்களை மட்டும் சார்ந்து, உலகெங்கும் தமிழர் வாழும் பிரதேசங்கள் எல்லாம் சேர்ந்தது ஈழம் ஆகிறது.
தமிழர் வாழும் இடம் எல்லாம் ஈழம் என்று பார்த்தால், ஈழம் இன்று இலங்கைத்தீவுக்கு வெளியே பரந்து, நீண்டு, பல உலக நாடுகளையும் தொட்டுச் செல்கிறது.
பொதுவாக நாடு என்பது ஒரு புவியியல் பிரதேசத்தில் வாழும் மக்களையும் அவர்களின் வளங்களையும், உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்டது.
அரசாங்கம் என்பது மக்களால், மக்களின் நலனைக்காக்கவும், வளங்களைப் பாதுகாக்கவும், மேலும் வளர்க்கவுமென அமைக்கப்படுவது.
ஆகவே நாடுகடந்த ஈழம் என்பது, தமிழ் மக்கள் வாழும் இடமெல்லாம் அவர்களையும், அவர்களின் வளங்களையும், முன்னேற்றத்தையும் அடிப்படையாகக்கொண்டது.
தமிழீழ அரசாங்கமும் இலங்கைத்தீவில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் வளங்களைப் பாதுகாக்கவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடவேண்டும்.
வளங்கள் என்னும்போது, இயற்கை வளங்கள், பொருளாதாரம், சமூகத்தின் கூட்டுமொத்த அறிவு என்பன உட்படும். தமிழரின் இயற்கை வளங்கள் இலங்கைத்தீவில் தமிழரின் கட்டுப்பாட்டில் இல்லை. இயற்கை வளங்கள் ஒரு நாள் நமது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கையுடன் நான் தொடர்ந்து வேலைசெய்யவேண்டும்.
புலம்பெயர் வாழ்க்கை எம்முடைய சில வளங்களைச் சிதைத்தாலும், பொருளாதாரம், கல்வி போன்ற சில பகுதிகளை முன்னேற்ற வழிசமைத்துள்ளது. இந்த வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்தி மேன்மேலும் முன்னேற வழிசெய்யவேண்டும்.
நாம் வாழும் நாடுகளின் பொருளாதார, அரசியல் அமைப்புக்களைப் பொறுத்து அங்கங்கு குடியேறும் வெளிநாட்டவர்களின் முன்னேற்றம் அமைகிறது. நோர்வே போன்ற நாடுகளில் சிறுபான்மையினர் வேறுபாடின்றி முன்னேற சகல வாய்ப்புக்களும் உள்ளது. இங்கு அமைக்கப்படும் தமிழர் அவை இந்த வாய்ப்புக்களை அதிகளவு பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.
புலம்பெயர் வாழ்க்கை பண்பாட்டு விழுமியங்களை அழித்துவிடாமல் பாதுகாப்பது அந்தந்த நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகளின் கடமை. தமிழ்ச்சங்கங்கள், பாடசாலைகள், சமய அமைப்புக்கள் என்பன இதுவரை மிகப்பெரிய சேவையை ஆற்றி வந்துள்ளன.
இனி இவற்றுக்கெல்லாம் தாய் அமைப்பாக அமையப்போகும் நோர்வே தமிழர் அமை இந்தப்பணிகளை ஒருங்கிணைத்து, உலக அளவில் கோர்த்து முன்னெடுக்கும்.
கல்வி, சுகாதாரம், குழந்தைகள்-, இளையோர்-, முதியோர் விவகாரம், போக்குவரத்து, குடிவரவு/குடியகல்வு, பொருளாதாரம், பணப்புழக்கம், உற்பத்தி, கைத்தொழில், நீதி, சமயம், தொழில், தொலைத்தொடர்பு, வெளிநாட்டுத்தொடர்பு என சகல துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவற்காக, மந்திரிசபைகளை அமைத்து, ஆய்வுகளை நடத்தி, ஆய்வன செய்யவேண்டும்.
அரசாங்கம் மக்களிற்காகவே அன்றி, மக்கள் அரசாங்கத்திற்காக அல்ல. மக்கள் இருக்கும் இடத்தில் தான் அரசாங்கம் அமைய வேண்டுமே தவிர, அரசாங்கம் இருக்கும் இடத்திற்கு மக்களை நகர்த்த முடியாது!
Recent Comments